இனவாதத்திற்கு பதிலாக மனிதநேய அரசியல்

‘வன்னியிலிருந்து தேர்தலில் போட்டியிட்ட சிங்களவர்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்ற தலைப்பில் அருண சிங்கள பத்திரிகையில் வெளியான விவரண கட்டுரை தொடர்பாக  இக்கட்டுரை கவனம் செலுத்துகின்றது.

1a

 

இலங்கையிலுள்ள சமுதாயத்தைப் பற்றி ஆராயும்போது இன பல்வகைமை தொடர்பாக அறிந்துகொள்வதை தவிர்க்க முடியாது. சிங்கள மக்களிடையே காணப்படும் இனம், மதம், சாதி மற்றும் புவியியல் ரீதியான பிரிவுகள், உதாரணமாக மலைநாடு மற்றும் தாழ்நிலம் என்பன பல்வகைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகும். மனித சமூகம் பல்வகைமையை கொண்டிருக்கக் கூடாதென்ற வாதத்தை நியாயப்படுத்த முடியாது. காரணம், பல்வேறு சமூகங்களைக் கொண்ட சமுதாயம் அழகானது.

எவ்வாறாயினும், ஆட்சிமுறை, பொதுச் சேவை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே வகையான கட்டமைப்பு காணப்படுவதே நியாயமானதாகும்.  கலாசார வேறுபாடுகளை புறக்கணிப்பதாக இது அர்த்தப்படாது. பல்வகைமைத்துவத்தை மதிக்கின்ற சந்தர்ப்பத்தில், சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்கின்ற மக்களின் உரிமைகளை கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. இன அடிப்படையிலான அரசியல் கட்சிகள் காணப்படும் தற்போதைய சூழலில், சமத்துவத்தின் அடிப்படையில் இறையாண்மையை பரீட்சித்துப் பார்க்க பொதுமக்களை வழிநடத்துவது ஆபத்தானது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரையானது,  2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாமல் போனமை பற்றி கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை 25 நிர்வாக மாவட்டங்களையும் 22 தேர்தல் மாவட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறு விகிதாசாரங்களில் வாழ்கின்றனர். இதில், எந்த மாவட்டத்திலிருந்து யார் போட்டியிட்டாலும் அவர்களது வாய்ப்பை கட்டுப்படுத்தக் கூடாது. எவ்வாறாயினும், இன அடிப்படையிலான பிரிதிநிதித்துவம் என்பது மாவட்டங்களில் காணப்படும் இனரீதியான சனத்தொகை பரம்பலை பொறுத்தே அமைகின்றது. அத்தோடு, இன அடிப்படையில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வாக்காளர்கள் என்ற விடயம் தவிர்க்க முடியாதவை.

எவ்வாறாயினும், இன அடையாளம் என்பது ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படையாக இருக்கக் கூடாது. காரணம், மக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஒரு தொடர்பாகவே பிரதிநிதித்துவம் அமைய வேண்டும். எந்தவொரு வாக்கும் சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் வாக்கு என எண்ணப்படவில்லை. கட்சி அல்லது வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தேர்தல் அமைந்தது. மக்கள் பிரதிநிதிகள், தமக்கு விருப்பு வாக்கு வழங்கியவர்களுக்கு மட்டுமன்றி சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை விடுத்து எந்தவொரு பிரதிநிதியும் வாக்காளர்களை இன மற்றும் மத அடிப்படையில் பிரித்தால், சந்தேகத்திற்கிடமின்றி அது மோசமான பிற்போக்கான சிந்தனையாகும்.

 

வன்னி மாவட்டமானது, இன ரீதியில் தமிழ் மக்களை அதிகமாக கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் ஆறு ஆசனங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு ஆசனத்தையும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன. இங்கிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பார்த்தால் நான்கு தமிழர்களும் இரண்டு முஸ்லிம்களும் உள்ளனர். இங்கு சிங்கள வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் அவர்கள் வெற்றிபெற தவறிவிட்டார்கள் என்பதைப் பற்றியே மேற்குறித்த விவரணக் கட்டுரை குறிப்பிடுகின்றது. சிங்கள மக்கள், தாம் சிறுபான்மையாக வசிக்கும் ஒரு மாவட்டத்திலிருந்து ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தோல்வியடைந்தமை பற்றி நாம் விமர்சன ரீதியாக கவனம் செலுத்த வேண்டும்.

எவ்வாறெனினும், இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில், எட்டு மாவட்டங்களுக்கு இன அடிப்படையில் தமிழ் அல்லது முஸ்லிம் சமூகங்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. அவை, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள்; சிறுபான்மையாக வசிக்கும் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தளை, மாத்தறை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களாகும். வன்னி மாவட்டத்தில் சிங்கள பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்து நாம் விசேடமாக அவதானம் செலுத்தினால், இங்கு குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலும் சிறுபான்மை பிரதிநிதித்துவங்கள் இல்லாமை குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். எனினும், நீதியையும் ஜனநாயகத்தையும் ஆதரிக்கும் ஒவ்வொரு மனிதனும் அத்தகைய வாதம் ஒரு நியாயமான தளத்தை அடிப்படையாக கொண்டதல்ல என்பதை ஏற்றுக்கொள்வார்கள். மக்களை வலுப்படுத்துவதாக தேர்தல்கள் அமைய வேண்டுமே தவிர இனக்குரோதம் சார்ந்ததாக அமையக் கூடாது.

போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமே வன்னி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அத்தோடு, சிங்களவர்கள் தமது இன அடையாளம் காரணமாக அங்கு அநீதிக்கு உள்ளாகியிருக்கலாம். எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரும் வேறு மாவட்டங்களில் இதே நிலையை எதிர்கொள்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து இன சமூகங்களின் உரிமைகளையும் சமத்துவமாக ஏற்றுக்கொள்வதே, இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு நாம் முன்னெடுக்க வேண்டிய அடிப்படை செயற்பாடாகும்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இன, மத வேறுபாடுகள் இல்லை. மக்கள் மத்தியில் காணப்படும் பிளவுகளை பயன்படுத்தி அவர்கள் பயனடைகின்றனர். அதனால் மக்களை பிரித்தாள்கின்றனர். அரசியல்வாதிகளையும் மக்களையும் இணைக்கும் ஊடகங்கள், இதுகுறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். அரசியல்வாதிகளின் நலன்களுக்காக அல்லாமல், மக்களின் நலன்கருதி செயற்படுவது ஊடகங்களின் கடமையாகும்.

சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழும் பகுதியில் பாராளுமன்ற பிரதிநிநிதித்துவம் இல்லையென வாதிடுவதற்கு பதிலாக, உணர்வற்ற அரசியல் முடிவுகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கதைத்தால் ஊடகங்களை நாம் பாராட்டலாம். வன்னியிலுள்ள சிங்கள மக்களின் அவல நிலைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமைமே காரணம் என்றால், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற மாவட்டங்களிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட வேண்டும். அதேபோல வடக்கு மக்களின் பிரச்சினைகளும் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும். காரணம், அங்குள்ள பிரதிநிதித்துவச் சபைகளில் அவர்கள் பெரும்பான்மையை கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம்களுக்கு அதே நன்மை கிடைக்க வேண்டும். ஆனால், உண்மையில் அவ்வாறான நிலை இல்லை. வீடு, வேலைவாய்ப்பு, நீர், மின்சாரம், கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் அனைத்து சமூக மக்களும் சமமாக பாதிக்கப்படுகின்றனர்.

உண்மையான பிரச்சினை இன அல்லது மத வேறுபாடுகளில் தங்கியிருக்கவில்லை என்பதே யதார்த்தம். ஆனால் அரசியல் மற்றும் ஊடக நடைமுறைகள் வலுவான நல்லாட்சிக்கான அடித்தளத்தை உருவாக்கும்.

Leave a Reply