உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறிய ட்ரம்பிற்கு கதவடைத்த அமெரிக்க ஊடகங்கள்

இன்று  இங்குள்ள அனேகமான ஊடகங்கள் நாட்டில் முக்கியமான அல்லது பிரபல்யம் பெற்ற ஒரு சில அரசியல்வாதியாக இருக்கலாம் அல்லது மத போதகர்களாக இருக்கலாம். அல்லது வேறு துறை சார்ந்தவர்களாக இருக்கலாம், அத்தகையவர்கள் கூறுகின்ற அனைத்து பொய்களையும் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான விடயங்களையும் உண்மை என்று நம்பி தேடிப் பார்க்காமலே வெளிப்படுத்துவதே கடமை என்று ஒரு சில ஊடகங்கள் கருதுகின்ற நிலையில் அமெரிக்க ஊடகங்கள் ஒரு முன்மாதிரியை காட்டுவதாக உள்ளன. எப்போதும் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்கள், செய்தி நிறுவன பணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் ஊடக கடமையை செய்கின்ற அதே நேரம் விவேகமும், அறிவு கூர்மையும், உண்மைகளையும் பொய்களையும் பிரித்தறியும் ஆற்றலும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மக்களுக்கு உண்மைக்கு புறம்பான அல்லது நாட்டில் மக்கள் மத்தியில் பதற்றம், அச்ச சூழ்நிலை, பீதியை ஏற்படுத்தக் கூடிய அல்லது மத, அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு தூபமிடக்கூடிய விடயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் அரசியல்வாதிகளதும் பின்புல நோக்கங்களை வைத்துக்கொண்டு குறுகிய சுய நல நோக்கங்களை அடைய முற்படுபவர்களுக்கு களம் அமைத்து அவர்களை கிங் மேக்கர்களாக மாற்றும் மேடைகளாக மாறக் கூடாது என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடும் சந்தர்ப்பத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த ஜனாதிபதி ட்ரம்ப் தோல்வியை தாங்காது மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லவும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை குழப்பவும் மேற்கொண்ட முயற்சிக்கு விலை போகாது அந்நாட்டின் ஒரு சில ஊடகங்கள் கடைபிடித்த போக்கு உலகில் உள்ள ஊடகங்களுக்கு சிறந்த முன்மாதிரியாகும் என்றே கூறலாம்.

2020 நவம்பர் 03 ஆம் திகதி நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோசெப் ஆர். பைடன் வெற்றி பெற்று ஐக்கிய அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாயக தெரிவாகி உள்ளார். உலக வல்லரசுகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்காவின் நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் இருக்கின்ற 538 ஆசனங்களில் 290 இற்கு மேற்பட்ட ஆசனங்களை பைடன் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்றால் இந்த 538 ஆசனங்களில் 270 ஆசனங்களை பெற்றாக வேண்டும். 50 பிராந்தியங்களில் இருந்து தேர்தல் கல்லூரிகள் (Electoral Colleges) என்று அழைக்கப்படுகின்ற 435 மக்கள் பிரதிநிதிகள், 100 செனட்டர்கள் கொலம்பியா மாவட்டம் 03 அங்கத்தவர் தொகுதி என்ற அடிப்படையிலான ஆசன எண்ணிக்கையில் இருந்தே இந்த 270 என்ற வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

அவரது உப ஜனாதிபதியாக அதே கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பிரசையான பெண்ணான கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பெண் ஒருவர் உப ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

வெற்றிக்கான 270 இந்த ஆசனம் என்பது தேர்தல் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் அவரவர் கட்சி சார்பாக தெரிவாகின்ற உறுப்பினர் எண்ணிக்கையே ஜனாதிபதி அபேட்சகருக்கான வாக்காக கருதப்பட்டு வெற்றி இலக்கு அமைகின்றது. இந்த முறையானது இலங்கையில் போன்று ஆசன முறை அல்ல. இந்த தேர்தல் மூலம் அமெரிக்க பாராளுமன்றத்திற்கான 438 உறுப்பினர்களும் காங்கிரசிற்கான 100 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகின்றனர். பிரதான போட்டியாளர்களாக இரண்டு அபேட்சகர்கள் சார்பாகவும் தெரிவாகும் பாராளுமன்ற மற்றும் செனட் சபை உறுப்பினர்களது எண்ணிக்கையே இங்கு ஜனாதிபதிக்கான வெற்றியாகவும் கணிக்கப்படுகின்றது.

அதன்படி ஜோசெப் பைடனுடன் மறுமுனையில் இருந்து குடியரசு கட்சி அபேட்சகராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதியாக இருந்து வரும் டொனால்ட் ட்ரம்ப் 214 ஆசனங்களின் வெற்றியையே பெற்றுக்கொண்டார். மேலும் 54 ஆசனங்களின் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் அந்த அனைத்து ஆசனங்களையும் ட்ரம்ப் பெற்றுக்கொண்டாலும் இனி அவரால் 270 என்ற இலக்கை எட்டிப் பிடிக்க முடியாததால் ஜனாதிபதி என்ற கனவு சிதைவடைகின்றது. ஆனாலும் 2021 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் அவரால் பதவியில் இருக்க முடியும். ஜனவரி 20 ஆம் திகதி புதிய ஜனாதிபயாக பைடன் பதவிப்பிரமாணம் செய்கின்றார். எவ்வாறாயினும் 2020 நவம்பர் 08 ஆம் திகதி நள்ளிரவு வரையில் பெற்றுக்கொண்ட ஆசன எண்ணிக்கை 290 ஆக அமைந்ததோடு  07 கோடி 51 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றிருந்தார். அதே நேரம் 213 ஆசனங்களை பெற்று தோல்வியடைந்த டொனாலட் ட்ரம்ப் 07 கோடி 08 ஆயிரம் அளவிலான வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது ட்ரம்ப் தோல்வியடைகின்றார் என்ற தகவல் உறுதியாகியதும் அவர் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி என்ற முறையில் ஜோர்ஜியா, மிசிகன், பென்சில் வேனியா, வட கெரோலினா, நவாதா மற்றும் புலோரிடா ஆகிய பிராந்தியங்களின் முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்டிருக்காத நிலையில் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டி ஊடகங்கள் வாயிலாக பிரசித்தம் தேட முற்பட்டார். அவரது வாக்குகளை பைடனின் கட்சியினர் சூரையாடிவிட்டதாக ஊடகங்களை பயன்படுத்தி பாரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் அதிகம் எதிர்பார்த்திருந்த ஜோர்ஜியா மாகாணத்தின் முடிவுகளை வெளியிடுவதை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறுத்தவுள்ளதாகவும் மீண்டும் வாக்குகளை எண்ண உத்தரவிட அனுமதியை பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க முற்படுகின்றார். இந்த தகவலை வெளியிட்டுக் கொண்டிருந்த என்.பி. சி. (NBC News) அவரது கூற்றில் உண்மை இல்லை என்பதை புரிந்து கொண்டவுடன் ட்ரம்பின் உரையை இடையில் நிறுத்தியது.

பைடன் வெற்றி பெற்றுள்ளமை குறித்த தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த போது “தேர்தல் முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஊடகங்கள் எப்படி பைடன் வெற்றி பெற்றார் என்று அறிவிக்க முடியும்? அவ்வாறு கூற ஊடகங்களுக்கு உத்தரவிட்டது யார் என்று ட்ரம்பின் சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். அப்போது ஏனைய 10 இற்கும் மேற்பட்ட ஊடகங்கள் ட்ரம்பின் தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியதாக அறிய முடிகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் ட்ரம்பின் அதிகாரி ஒருவர் சீ.பி.எஸ். (CBS) செய்தி நிறுவனத்திற்கு இரவில் தொலைபேசியில் அழைத்து குறித்த தகவலை ஒளிபரப்புமாறு கோரியதாகவும் பின்னர் அவர்களும் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது, வேலைக்கு ஊழியர்கள் இல்லை, எல்லோரும் களைப்படைந்துவிட்டனர்  என்று மறுப்பு தெரிவித்ததாகவும் அந்நிறுவனத்தின் கேள் கிங் என்ற சிரேஷ்ட கட்டுரையாளர் அவரது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள ஜோசெப் ஆர். பைடன் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். அமெரிக்க ஜனாதிபதிகளின் வரலாற்றில் வயது கூடிய ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பது இதுவே முதல் தடவையாகும். பைடனுக்கு இப்போது வயது 78 ஆகும். 1966 ஆம் ஆண்டு நீலியா ஹன்டர் என்ற பெண்ணை திருமணம் முடித்தார். அவர் 1972 ஆம் ஆண்டு மரணமடைந்தார். பின்னர் 1976 ஆம் ஆண்டு ஜில் ஜெகொப் என்ற பெண்னை இரண்டாவதாக திருமணம் முடித்தார். இப்போது நான்கு பிள்ளைகளின் தந்தையாக இருக்கும் பைடன் 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஜனநாயக கட்சியின் உப தலைவராக இருந்தார். 1973 ஆம் அண்டில் இருந்து 2009 ஆம் அண்டு வரையில் அமெரிக்காவின் செனட்டராகவும் இருந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு பரக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் உப ஜனாதிபதியாக இருந்தவர் பைடன் ஆவார்.

இனி ஒரே உலக ஒழுங்கின் ஆட்சியாளன் என்று வர்ணிக்கப்படுகின்ற மற்றும் உலக வல்லரசுகளின் நாயகனாக கருதப்படுகின்ற ஐக்கிய அமெரிக்காவின் நாயகனாக கருதப்படுகின்ற பைடனின் தலைமையிலான அமெரிக்கா எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave a Reply