உறவுகளை நினைகூருவதற்கான உரிமையை மறுக்கலாமா?

இலங்கையில் நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாளில் (நவம்பர் 27), இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு பெருமெடுப்பில் நினைவுகூரல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் போர் முடிவுக்கு வந்த பிற்பாடும் குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இவ்வாறான நினைவுகூரல்கள் கடும் அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றன.

புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்த் தரப்பின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது என்பதோடு, உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பதோடு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு நடைமுறையை பேணி வந்தது. எனினும், 2008ஆம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் பெருமெடுப்பில் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் தினமாக அமைந்தது.

இந்த விடயத்தை அப்போதைய இராணுவத் தளபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவும் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகள் அமைப்பிற்கு மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வாய்ப்பு வழங்கப்போவது இல்லை என தெரிவித்திருந்ததாக, நாடாளுமன்றத்தில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அதுபோன்றுதான் போர் முடிவுக்கு வந்த பின்னர் இவ்வாறான மாவீரர் நினைவுகூரல்களை நடாத்துவது இலகுவான ஒன்றாக இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக தற்போதைய அரசாங்கம் இது விடயத்தில் இறுக்கமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதோடு, மாவீரர் தின நிகழ்வுகளுக்கும் முற்றாக தடை விதித்துள்ளது.

குறிப்பாக வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் ஊடாக இதற்கு தடை விதிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தால் தீவிரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒரு அமைப்பில் இணைந்து செயற்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர உரிமையுள்ளதாக தமிழர் தரப்பு தெரிவிக்கின்றது.

கொரோனா கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி, மாவீரர் நாள் நினைவேந்தல்கள் தடைசெய்யப்படும் என தெரிவித்திருந்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இவ்வுத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளுக்குச் சென்று மாவீரர்களைச் சுதந்திரமாக நினைவேந்தலாம். அங்கு அவர்களுக்குத் தடைகள் இருக்காதுஎன வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமையுள்ளது. அது அவர்களின் சொந்த உரிமை. அதை ஜனாதிபதியோ அல்லது அரசோ அல்லது வேறு ஆட்களோ தடுத்து நிறுத்த முடியாதுஎன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர மூவின மக்களுக்கும் உரிமையுண்டு. அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் இருக்கவேகூடாது. எனவே, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாதுஎன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் தெரிவித்திருந்தார்.

எனினும், நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் இலங்கை அதிகாரிகளால் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

சட்ட ஏற்பாடுகளையும், கொரோனா கட்டுப்பாடுகளையும் தவறாகப் பயன்படுத்தி, நினைவுகூருவதைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இப்புதுப்பிக்கப்பட்ட முயற்சியானது இனவாதம் மற்றும் அடக்குமுறையின் அடுத்த கட்டம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் கல்லறைகளை துப்புரவு செய்ய முயற்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு அப்பால் சென்று, வடக்கு மற்றும் கிழக்கில் புலிகள் அமைப்பு உறுப்பினர்களின் கல்லறையை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் சோதனைச் சாவடிகளை அமைத்திருந்தனர்.

உள்ளூர் நீதிமன்றங்கள் ஊடாக பொது நினைவு கூரல் நிகழ்வுகளுக்குக் குறிப்பாகத் தடைவிதிக்கப்பட்டதோடு, பல தனிநபர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும், அவற்றிற் கலந்துகொள்வதற்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் இத்தடைகளை நியாயப்படுத்துவதற்கான சாக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், சிவப்பு, மஞ்சள் கொடிகள் மற்றும் பதாகைகளைப் பயன்படுத்துவது போன்ற நினைவுகூரற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படுவதோடு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது மாத்திரமன்றி, கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி தமிழ் இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்தன்று, விளக்குகளை ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, சுன்னாகம் பிரதேசத்தில் பல இடங்களில் இந்த சமய நிகழ்வுக்கும் பொலிஸார் தடை விதித்திருந்தனர்.

கார்த்திகை தீபம் ஏற்றும் மத பாரம்பரியத்தை, புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூரும் நிகழ்வு என தவறாக நினைத்துக்கொண்டு, விபரம் அறியாத பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விடயத்தை மனோ கணேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதோடு, வடக்கு, கிழக்கில் பணியாற்றும் பொலிஸாருக்கு தமிழர்கள் மற்றும் இந்துக்களின் விசேட விழாக்கள் மற்றும் பண்டிகைகள் தொடர்பில் அறிவூட்டுமாறும் துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

தடைகளேதுமற்ற நினைவுகூரலானது, வடுக்கள் ஆற்றப்படுவதற்கும், போரில் இழக்கப்பட்டவர்களைக் கௌரவப்படுத்துவதற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

யுத்தம் நிறைவுபெற்ற 2009 இற்குப் பின்னரான தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாக இதுவும் இணைந்துள்ளது.

எனினும் இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் செவிசாய்க்காத அரசாங்கம், தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்ற அடிப்படையில் அதற்கான அனுமதியை மறுத்து வருகின்றது.

உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல்களைத் தடைசெய்வதானது, நினைவுகூர்வதற்கான தமிழர்களின் உரிமையினை மீறும் இனவாத அடக்குமுறை என்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மரபாகும். உலகெங்கும் இவ்வாறான ஏராளமான நினைவிடயங்களை நாம் காணலாம். வருடத்தில் ஒரு நாளில் தமது உறவுகளை நினைவுகூருவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதானது பாதிக்கப்பட்ட மக்களை மென்மேலும் அழுத்தங்களுக்குள்ளாக்கவே வழிவகுக்கும்.

Leave a Reply