ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சவாலாகும் போலிச்செய்திகள்

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைவதில் இருக்கின்ற அதே துரிதம் அதை பாதுகாப்பாக எதிர்கொள்வதில் இல்லை என்பதற்கு இன்று நாம் எதிர்கொள்கின்ற போலிச் செய்திகள் மிகப்பெரியதொரு சான்று. இணைய உலகத்தின் சீரான இயக்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற போலிச் செய்திகள் தொடர்பான ஆய்வும் அதை எதிர்கொள்வதற்கு போதியளவு அறிவும் இல்லாமையே இதன் பரவலுக்கு காரணமாகும் என போலிச் செய்திகள் பற்றிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வுகள்

தற்போது இலங்கையில் 1.2 மில்லியன் பேஸ்புக் கணக்குகள் போலியானவை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் நகைச்சுவை, இனவாதம், வியாபாரம் மற்றும் பாலியல் நோக்கங்களுக்காகவே அதிகமான முகப்புகளும் பக்கங்களும் இயங்குகின்றன. மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தினால் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் பேஸ்புக்கில் 61.5 வீதமான பயனாளர்கள் போலிச் செய்திகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வில் போலிச் செய்திகள் மிக வேகமாக பரவிச் செல்வதற்கு பொதுமக்களிடம் ஒப்பீட்டளவில் கல்வியறிவு இருக்கின்ற போதிலும் ஊடக அறிவு அதாவது விமர்சன ரீதியாக ஊடகங்களுடன் இணைந்து பயணிக்கும் ஆற்றல் இல்லாமையே காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்களுக்கு சவால்

போலிச் செய்திகளை கையாள்வதில் ஊடகவியலாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள்.  ஒரு செய்தியை எழுதும்போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதில் உள்ள சிக்கலுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போலிச்செய்திகள் உருவாக்கப்படுவது ஒரு காரணம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம். ரசூல் கருதுகின்றார்.

கே.எம். ரசூல் கடந்த பல வருடங்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் வெளியிடப்படும் போலிச் செய்திகளை ஆய்வு செய்து அறிக்கையிடுவதில் கவனம் செலுத்துகின்றார். தனது ஊடகப்பயணத்தில் போலிச் செய்திகளை எதிர்கொண்ட அனுபவத்தை அவர் தெரிவிக்கையில் “தற்காலத்தில் போலிச் செய்திகள் பொய் என்று இனங்காண முடியாத அளவில் இருக்கின்றன. இந்த செய்திகள் வாசகர்களின் மனதில் உணர்திறனுடன் பதிவாகுவதால் அவர்களின் அடுத்த தெரிவு அதை பகிர்வதாகவே உள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் வெளிநாடுகளைப் போன்று போலிச் செய்திகளை கையாள்வதற்குரிய நிபுணத்துவம் கிடையாது. பேஸ்புக்கில் மிகவும் சூட்சுமமான முறையில் பகிரப்படும் செய்திகளை பொய் என்று அடையாளம் காணுவது ஊடகவியலாளர்களுக்கே சவாலான ஒன்றாக இருக்கின்றது. பொதுமக்கள் அதை பொய் என்று தெரியாமல் தமது கருத்தை பதிவு செய்வது, பகிர்வது என்று அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை செல்கின்றது.

போலியான செய்திகளை போலி என அறிக்கையிட ஒரு சில நிறுவனங்கள் இருந்தாலும் அதன் விரைவுத்தன்மையில் குறைபாடுகள் இருக்கின்றன. ஊடகவியலாளர்கள் போலிச் செய்திகள் தொடர்பாக போதுமானளவு அறிவுடன் இல்லாதபட்சத்தில் இந்த நிலைமை இன்னும் மோசமாக அமைந்து விடும். அண்மைய ஆய்வுகளின்படி அரசியல் ரீதியாக அதிகமான போலிச் செய்திகள் வெளியாகின. இலங்கையில் இது தொடர்பாக விழிப்புணர்வூட்ட செயலமர்வுகள், கருத்தரங்குகள் என நடைபெற்றாலும் அதில் போதிக்கப்படும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை” என்றார்

கலாசாரமாகும் போலிச் செய்திகள்

ஒரு சில போலிச் செய்திகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து அவை காலங்காலமாக நம்பப்படும் கலாசார உண்மைகளாக மாறி விடுகின்றன. உதாரணமாக எயிட்ஸ் நோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என சமூகத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எல்லா நோய்களுக்கும் ஏதோவொரு சிகிச்சை இருப்பதுபோல இதற்கும் இருக்கின்றது என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கிராஸ்ரூட் ட்ரஸ்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஹான்ஸ் பில்லிமோரியா “இலங்கையில் பாடசாலைக் கல்வியிலும் ஏனைய கல்விச் செயற்றிட்டங்களிலும் பாலியல் தொடர்பான அடிப்படைக் கல்வி இல்லாமை இவ்வாறான போலிச்செய்திகளுக்கு அடிப்படை காரணமாகும். பாலியல் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான போலிச்செய்திகளை தடுப்பதற்கும் இவ்வாறான இணையவழி போலிகளுக்கு துணை போகாமல் இருப்பதற்கு முறையான பாலியல் கல்வி துணை நிற்கும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் பிரபலங்களாக உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகளின் போலியான நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் காலங்காலமாக உலா வருவதுடன் அவற்றை மக்கள் அச்சொட்டாக நம்பும் மனநிலையும் இருக்கின்றது. இலங்கையை பொறுத்தவரையில் அரசியல்வாதிகளின் பெயரிலும் இந்த நிலைமை இருக்கின்றது.

அண்மையில் இது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர வருத்தம் தெரிவித்திருந்ததுடன் தனது தொலைபேசி உரையாடலை கள்ளத்தனமாக பதிவு செய்து அதனை திரிபுபடுத்தி செப்பனிட்டு வெளியிட்டதாக 20 இற்கும் மேற்பட்ட யுடியுப் அலைவரிசைகளுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக எச்சரித்திருந்தார். அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரம் தொடர்பாக போலியான செய்திகளை வெளியிட்ட விஷமிகளுக்கு எதிராக சட்டரீதியாக பாடம் கற்பிப்பேன் அவர் சூளுரைத்தார்.

இலத்திரனியல் பத்திரிகைகளின் பெயரில் போலிச்செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சம் தலைதூக்கியிருந்த காலத்தில் பத்திரிகைகள் அச்சு வடிவத்தில் வெளிவராமல் இலத்திரனில் வடிவத்தில் வெளிவந்தன. இணையத்தில் இலவசமாக இலத்திரனியல் பத்திரிகைகள் (ஈ-பேப்பர்) கிடைத்ததால் இவற்றை இலகுவாக மாற்றீடு செய்து பத்திரிகைகளின் பெயர்களிலும் போலிச்செய்திகள் உருவாகின.

 

மெட்ரோ நிவ்ஸ், விடிவெள்ளி, வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளின் முகப்பினை செப்பனிட்டு குறித்த பத்திரிகைளின் ஆசிரியர் குழுவை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் போலியான செய்திகள் வெளியாகின. இதனால் வாசகர்கள் குழம்பிப்போகும் ஒரு நிலைமை ஏற்பட்டது. இந்த பத்திரிகைகளின் வலைதளத்தில் உடனடியாக அவற்றை போலியான செய்தி என்று அறிக்கை பதிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த மே மாத நடுப்பகுதியில்  இவ்வாறான போலிச் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கூறியதாக போலியான செய்திகளை, பல்வேறு தமிழ் மொழி பத்திரிகைகளின் இலச்சினைகளைப் பயன்படுத்தி வடிவமைத்து பகிரப்பட்டன. இச் செயற்பாடு அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி பத்திரிகைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளதுடன் வாசகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவதாக அமைந்துள்ளன. இதன் மூலம் பத்திரிகைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இவ்வாறு பத்திரிகைகளின் பெயரைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை பரப்புவோர் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் வரும் கணினி குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவுக்கு முறைப்பாடளித்துள்ளதாக மேற்படி பத்திரிகைகளுள் ஒன்றின் டிஜிட்டல் பிரிவு முகாமையாளர் தெரிவித்தார்.

போலிச்செய்தியின் விளைவுகள்

“போலி செய்திகள் குறிப்பாக சமூக ஊடக தளங்களில் நாம் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஒரு விடயத்தை பகிர முன்னர், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தவறுவதால் பாமர மக்கள் அதனை உண்மையென நம்பும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அத்தோடு, அச்செய்திகளால் ஒரு தரப்பினர் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளது என  சுயாதீன ஊடகவியலாளர்  கலாவர்ஷ்னி கனகரட்ணம் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “தகவல்கள், படங்கள் ஏன் காணொளிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான தொழிநுட்ப ரீதியான நுணுக்கங்கள் தற்போது காணப்படுகின்றன. ஒரு  விடயம் வெளியாகிய உடனே, பாமர மக்கள் அதனை செய்துகொண்டிருக்கமாட்டார்கள். ஆகவே முதலில் அவற்றை வெளியிடுபவர்கள் போதுமான அளவு உறுதிப்படுத்திய பின்னரே அதனை வெளியிட வேண்டும். குறிப்பாக ஊடகவியலாளர்கள் இந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பதோடு, போலிச்செய்திகள் எவ்வளவு பாரதூரமானவை என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டினால் ஓரளவு கட்டுப்படுத்த முடியுமென்பது எனது அவதானம். மக்களுக்கு துல்லியமான தகவல்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக குற்றம்சாட்டப்பட்ட தரப்பினரையும், உரிமை கோரும் தரப்பினரையும் நாங்கள் எப்போதும் கேள்வி கேட்க வேண்டும் என்பதை மனதிற்கொள்வது அவசியம்” என்றார்.

போலிச்செய்திகளை கண்டால் நீங்கள் செய்ய வேண்டியது?

இவ்வாறான போலிச் செய்திகள் பகிரப்படும்போது அவை தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பதுடன் அவற்றின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டியது அவசியமாகும் என அண்மையில் பத்திரிகைகளின் பெயரில் வெளியான போலிச்செய்திகள் தொடர்பாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம். பைறூஸ் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஒரு செய்தியை சரிபார்க்கும்போது பின்வரும் விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும் என அவர் வழிகாட்டுகிறார்.

  1. உங்களுக்கு கிடைக்கப் பெறும் எல்லா தகவல்களையும் பகிராதீர்கள். பிறருக்கு அவசியமான தகவல்களை மாத்திரம் தெரிவு செய்து பகிருங்கள். பகிர முன்னர் சிந்தியுங்கள்.
  2. கிடைக்கப் பெறும் தகவல் உத்தியோகபூர்வ தரப்புகளால் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை அவதானியுங்கள்.
  3. பத்திரிகைகளின் பெயரில் செய்திகள் பகிரப்படும்போது பத்திரிகைகளின் இலச்சினை, பிரசுரிக்கப்பட்டுள்ள திகதி, பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துருக்கள் பற்றி கூர்ந்து அவதானியுங்கள். சந்தேகங்களிருப்பின் பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினவுங்கள்.
  4. நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதள நிறுவனங்களின் செய்திகளை பின்தொடருங்கள்.
  5. உங்களால் தகவல்களை உறுதிப்படுத்த முடியாவிடின் அத் தகவல் பிரதான ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளதா என தேடுங்கள். இன்றேல் உங்களுக்குப் பரிச்சயமான அதிகாரிகள், ஊடகவியலாளர்களின் உதவியை நாடுங்கள்.
  6. போலிச் செய்திகளை உருவாக்குதல், பகிர்தல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். உங்கள் சமூக ஊடக பதிவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  7. தயவு செய்து நீங்களும் போலிச் செய்திகளை பரப்புவோரில் ஒருவராக இருக்காதீர்கள்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply