எரிப்பதும் புதைப்பதும் மக்களின் தேர்வா? அரசின் கட்டளையா?

“கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இதுவரை செய்யப்படவில்லை, இந்த விடயத்தில் இன, மத ரீதியாக எவ்வித சலுகைகளையும் வழங்க எதிர்பார்க்கவில்லை.” என  தொற்றுநோய் ஆய்வுப் பிரிவுப் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். (24ஆம் திகதியான இன்றைய இந்த கட்டுரை எழுதப்படும் தினத்தில்)

 

கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை உயிரிழந்தவர்களில் பல முஸ்லிம்கள் உள்ளடங்குவதோடு அவர்கள் அனைவரும், இஸ்லாமிய மார்க்கத்திற்கு அமைவாக புதைக்கப்படாமல் எரிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே இந்த சர்ச்சை நீள்கின்றது, எவ்வாறெனினும் இலங்கையில் வாழும் எந்த மதத்தை, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் பட்சத்தில் அவரை எரிப்பது என அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொண்டு அதனை செயற்படுத்தியும் வருகின்றது.

 

இந்த விடயம் உடலை புதைக்கும் வழக்கத்தை கொண்டிருக்கும் இலங்கையில் வாழும் ஏனைய மதப் பிரிவினரிடையே பிரச்சினையை ஏற்படுத்தவில்லை (கிறிஸ்தவர்கள், ஒரு சில இந்துக்களும் இறந்த உடல்களைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்) எனினும் இஸ்லாமியர்கள் அவர்களில் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் குறிப்பாக மதம் சார்ந்து (ஏனைய இனங்களை விட) இறுக்கமான நடைமுறைகளை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் இந்த விடயம் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. தமது உறவுகள் தமது மார்க்கத்திற்கு எதிராக எரிக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

ஒரு இறந்த உடல் புதைக்கப்படும்போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு அமைய சொர்க்கம் நரகம் கிடைக்குமென்ற திடமான நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு காணப்படுகின்றது. ஆகவே இறந்த உடல்கள் புதைக்கப்படாமல் எரிக்கப்படும்போது, அந்த உயிர்கள் விண்ணுலகிற்கு செல்லும் முன்னரே மண்ணுலகில் தண்டிக்கப்படுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

 

எனினும், இலங்கையின் சுகாதார நிபுணர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாகவும், இலங்கையில் நிலத்தடி நீரின் மட்டம் உயர்வாக இருப்பதே அதற்குக் காரணம் எனவும் தெரிவித்து, இந்த விடயத்திற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கமைய கொரோனாவால் உயிரிழக்கும் அனைத்து சடலங்களும் தகனம் செய்யப்படவேண்டும் என்ற அவர்களின் அறிவுறுத்தல், முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக அமைகின்றது என்பது இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு.

 

உள்நாட்டு முஸ்லிம்களிடமிருந்து அல்லது வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து என்னதான் எதிர்ப்புகள் வந்திருந்தாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவும், அவரது அரசாங்கமும் இதை மீள்பரிசீலனை செய்யத் தயாராயில்லை. இந்த நிலையில், இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் குறிப்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் பிரச்சினைக்கு இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.

 

கடந்த நவம்பர் 4ஆம் திகதி முதல் இடம்பெறும் ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வுகளிலும் முஸ்லிம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முஸ்லிம் ஜனாசாக்களை (பூதவுடல்களை) எரிக்கவிடாமல் புதைப்பதற்கான கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் பரிசீலனை செய்வதாக நீதியமைச்சர் அலி சப்ரியும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் தெரிவித்திருந்தனர். எனினும் இதுவரை இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.

 

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த இந்த வருட ஆரம்பத்தில், தொற்றுநோய் பரவலுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படும் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு உலகின் சக்திவாய்ந்த இஸ்லாமிய அமைப்பு இலங்கைக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

 

இவ்வாறான சர்ச்சைகள் தொடர்கின்ற நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரது உடலை குடும்பமும், நண்பர்களும் பார்வையிடலாம் என்பதோடு, தம்முடைய பழக்கவழக்கங்களுக்கு அமைய அடக்கம் செய்ய முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறெனினும் பூதவுடலைத் தொடவோ முத்தமிடவோ கூடாது. உடலை அடக்கம் செய்தபின் உரிய சுகாதார நடைமுறைகளைக் கைக்கொள்ளவேண்டும். கைகளை சவர்க்காரமிட்டு தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

 

உடலை புதைக்கும் செயற்பாட்டை மேற்கொள்பவர்கள், கையுறைகள்,  முகக்கவசம் மற்றும் சுகாதார பாதுகாப்பு அங்கி ஆகியவற்றை அணிந்துகொள்ளவேண்டும். அதன் பின்னர் மேலங்கிகள் முகக்கவசம் உட்பட எல்லாவற்றையும் அழித்துவிடுவதும் சவர்க்காரம் கொண்டு கைகள் மற்றும்  உடல் முழுவதையும் கழுவ வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

 

இலங்கையைப் பொறுத்தவரை இறந்த கொரோனா நோயாளர்கள் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப உறவினர்களிடம் இருந்து பெட்டிக்கான தொகைப்பணம் அறவிடப்பட்டு உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் நெருங்கிய உறவினர்கள் ஓரிருவர் சீல் செய்யப்பட்ட உடலுக்கு அஞ்சலி செலுத்தமுடியும். அவர்களும் அதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவர்களாக இருக்கவேண்டும்.

 

இந்நிலையில் ஐநாவுக்கான வதிவிட இணைப்பாளர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி உள்ளூர் தரநிலைகளுக்கு ஏற்ப மக்களின் தேர்வின்படி உடலைக் கையாள்வதற்கு உரிய சுகாதார நடைமுறைகளுடன் அடக்கம் செய்யலாம். இந்த நிலையில் அடக்கம் தொடர்பான இலங்கையின் கொள்கையை தங்களுக்கு எதிரான பாரபட்சமாக முஸ்லீம் மக்கள் உணர்கின்றனர்.இந்தப் பின்னணியில் புதைப்பதற்கு உடன்படாதது சமூகத்தின் ஒத்திசைவில் தாக்கத்தை விளைவிக்கும். குறிப்பாக கொவிட் வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கையை மோசமாக பாதிக்கும் என்பது எனது அச்சமாக உள்ளது. ஏனெனில் மக்கள் கொவிட் அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்வதிலோ, சுகாதார சேவையை பயன்படுத்துவதிலோ பின்னிற்கலாம்.’ என்றும் எனவே கொள்கையை மீள்பரிசீலனை செய்யும்படியும் கேட்டிருந்தார். இவை எதையுமே அரசு கண்டுகொள்ள முடியாதபடி பலர் இதை வேறு திசைக்கு திருப்பியுள்ளனர்.

 

தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவரான குணதாஸ அமரசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்தில், ‘இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைக்கக்கூடாது’ எனத் தெரிவித்திருந்தார்.  மேலும், ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்திய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர், உடல்களை புதைக்கும் பட்சத்தில், இஸ்லாமியர்கள் சொர்க்கத்தை அடைய முடியுமென்ற நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் இதனாலேயே அவர்கள் உடல்களை புதைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டதோடு, அவ்வாறு கடவுள் என ஒருவர் இருந்தால் இந்த கொரோனா வைரஸை அழித்திருக்க முடியுமே எனவும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வகையில் சுகாதார தரப்பின் ஆலோசனைக்கு அமைய, கொரோனாவால் உயிரிழக்கும் அனைவரது சடலமும் எரிக்கப்படுமேயன்றி, புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என, ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இலங்கையின் தற்போதைய நிலையில் இருக்கக்கூடிய இக்கட்டுகள், பல்லின சமூக ஒருங்கிணைவு, விஞ்ஞானபூர்வமான முன்வைப்புகள், இவை பற்றி எதுவும் பேசாது ஒரு இனம் சார்ந்து மதம் சார்ந்து வெறுப்பை உருவாக்கும் எண்ணங்களை பலர் விதைத்து வருகின்றனர்.

 

அரசும் தனது வர்த்தமானி அறிவித்தலின்படி 90ஆவது (கொரோனா) சடலத்தையும் தகனம் செய்துள்ளது.

Leave a Reply