சுகாதாரத்துறை ‘கவனிப்பு’ எங்கே? இலங்கையின் பொது சுகாதாரத்துறை குறித்த ஒரு விமர்சனம்

இலங்கை பொது மருத்துவ பராமரிப்பை இலவசமாக வழங்குகிறது என்று கருதுவதானது தவறான எண்ணமாகும். இத்தகைய பராமரிப்புகள் தேவைப்படும் நபர்களுக்கான அறுவை சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் தங்கியிருத்தல் மற்றும் அரசு நடத்தும் மருத்துவ வசதி, மருந்துகள் போன்றவற்றிற்கு உடனடியாக பணம் செலுத்த வேண்டியதில்லை என்பது உண்மையே என்றாலும், குடிமக்கள் ஏற்கனவே இந்த பராமரிப்புக்காக, விதிக்கப்பட்டுள்ள வரிகள் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். நாட்டில் வருமான வரி மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்று இவற்றுக்கான கட்டணங்களை அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது. இதன் அடிப்படையில், இங்கே கவனத்தில்கொள்ள வேண்டியது என்னவென்றால், இலங்கையின் சுகாதார பராமரிப்பு என்பது பொது நிதியில் இயங்கும் ஒன்றாகும்.

‘மருத்துவ பராமரிப்பு’ என்ற வார்த்தையின் பரந்த வரைவிலக்கணம் என்னவென்று நோக்குவோம். டாக்டர் ராபர்ட் சுவெல் 2012 இல் எழுதிய கட்டுரையில், சுகாதாரத்துறையை பின்வருமாறு வரையறுக்கிறார்: “ஒரு மனிதனால் இன்னொருவருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட சேவை என்பதாகும். பண்டைய காலங்களிலிருந்து இருந்தே குறிப்பிட்ட சேவையை வழங்குபவர் ‘மருத்துவர்’ என்றும் பெறுநர் ‘நோயாளி’ என்றும் அழைக்கப்படுகின்றனர்”. இவ் வரைவிலக்கணத்தில் ‘ஒரு மனிதனால் இன்னொருவருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட சேவை’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மிக முக்கியமானது. இல்லையென்றால், அதை சுகாதாரப் பராமரிப்பு என்பதற்கு பதிலாக சுகாதார சேவைகள் அல்லது மருத்துவ வசதிகள் என்று அழைக்கப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு நோயாளிக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக, பராமரிப்பு தேவைப்படுவதற்கான காரணம் நோய்வாய்ப்பட்டிருக்கையில் அது ஒருவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கக்கூடியதாக அமைகிறது  என்பதால் ஆகும். உங்கள் அவயவங்கள் முழு அளவில் சரியாக செயல்படாதபோது, அது உங்களை நோயில் ஆழ்த்தும். எச்.ஐ.வி, புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் நீண்ட காலமாக இருக்கும் என்பதால் இந்த பாதிப்பு உணர்வு மேலும் அதிகரிக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடுவதில் மக்கள் தங்கள் வாழ்க்கையின் பல ஆண்டுகளை செலவிடுகிறார்கள் என்றால், அர்ப்பணிப்புடனான பராமரிப்பும் அதுபோல் சமமாக நீண்ட காலம் நீடிக்க வேண்டும். இந்த வகையான பராமரிப்பு பொதுவாக வீட்டில் உறவினர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் மற்றும் மருத்துவமனையில் சுகாதார சேவகர்களால் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

இவ்வாறான கட்டணமற்ற பராமரிப்பு நம் நாட்டின் பொருளாதார குறிகாட்டிகளில் ஒரு காரணியாக கருதப்படுவதில்லை. அரசாங்கமும் அதற்கு ஒரு பெறுமதியைக் கொடுப்பத்தில்லை. இந்த சூழலில், வீட்டில் வழங்கப்படும் பராமரிப்பு பொருளாதாரத்தில் ஒரு பொருட்டாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதும் இல்லை. வீட்டு பெண்கள் எப்படியாவது இதுபோன்ற கடமைகளைச் செய்வார்கள் என்று நாங்கள் எப்போதும் எதிர்பார்ப்பதே இதற்கு காரணம். அதேபோல், சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் பிறர் நமது பொது சுகாதார அமைப்பினுள் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மற்ற கடமைகளுடன் இந்த பராமரிப்பையும் வழங்குகிறார்கள் என்று கருதுகிறோமா? இல்லை என்பதே பதில்.

முதன்மையான நோயறிதல்கள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்ற என்பது உண்மையே ஆயினும், அதேவேளை தவறாமல் கிரமமாக சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் பதிவுசெய்துள்ள புற்றுநோயால் பீடிக்கப்பட்ட ஒருவர் இந்த மருத்துவ அமைப்பில் சம்பந்தப்பட்ட பலருடன் தொடர்புபடுகிறார். புற்று நோய்க்கான கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சைகளுக்கு குறிப்பிட்ட காலம், நேரம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இரத்த பரிசோதனைகளைப் பெறுவதற்கும், அவர்களின் கீமோதெரபி கிளினிக்கில் சிகிச்சைகளைப் பெறுவதற்கும், அதற்காக பெயர் அழைக்கப்படுவதற்கும் நீண்ட நேரம் காத்திருந்து, கணிசமான நேரத்தை செலவிடுவார்கள்.

புற்றுநோயால் பீடிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக, ஒரு கிளினிக் நாளில் அதிகாலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள், அன்று மாலை வரை அவரால் அங்கிருந்து வெளியேற முடிவதில்லை. இந்த நேரத்தில், அவர் பல்வேறு பாதுகாப்புக் காவலர்கள், உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் சம்பந்தப்படுகிறார். இந்த ஈடுபாடுகள் பெரும்பாலும் மரியாதைக்குரியவை, ஆயினும், சில சமயங்களில் வெளிப்படையான முரட்டுத்தனமானவை. அதிக எண்ணிக்கையான நோயாளிகள் மற்றும் குறைவான பணியாளர்களைக் கொண்டு இருக்கும் ஒரு மருத்துவமனை அமைப்பில், தயவுகாட்டவோ அல்லது நோயாளியுடன் போதுமான நேரத்தை செலவிடுவதற்கோ சம்பந்தப்பட்டோரால் முடிவதில்லை. மிகவும் குறுகிய நேரத்தில் அடுத்த நோயாளியை கவனிக்க வேண்டியுள்ளது. மருத்துவர் முடிந்தவரை விரைவாக அடுத்த நோயாளியைக் கவனிக்க வேண்டி ஏற்படுவதால், நோயாளிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பொறுமையாக பதிலளிக்க முடிவதில்லை.

நோயாளர்கள் அவர்களின் பெயர்கள் அழைக்கப்படும்போது அதை அவர்களால் சரியாக கேட்க முடியவில்லை என்ற காரணத்தினால் அவர்களால் அழைப்புக்கு பதிலளிக்க முடியாது போனால்  ஒரு சில செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அவர்களை நோக்கி கூச்சலிட்டு, கால்நடைகள் போன்று நடத்துகின்றனர். உண்மையில், நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான எந்தவொரு மருத்துவமனைக்கு சென்றாலும் நோயாளர்கள் பண்ணை விலங்குகளைப் போன்று நடத்தப்படுவதை காணலாம். நோயாளிகளை நோக்கிய தொடர்ச்சியான கூச்சலையும் சாதாரணமாக அவதானிப்பீர்கள். சுகாதார பராமரிப்புத்துறை பராமரிப்பின்றி இருக்கின்றது என்பது மட்டுமல்லாமல் அது நோயாளியின் கௌரவத்தையும் பாதிக்கிறது.

இந்த வகையான மனிதாபிமானமற்ற நடத்தையின் பின்னால் உள்ள உந்துதல் என்ன என்ற கேள்வியை அது கேட்கிறது.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் சுகாதாரத்துறை சேவகர்களின் பண்பான கவனிப்புக்கு நேரமில்லையா…?  பல நோயாளிகள் அன்றாடம் இறப்பதை பார்ப்பதன் காரணமாக ஒரு புதிய நோயாளியைப் பராமரிப்பது பிரயோசனம் அற்றது என்ற எண்ணம் ஏற்படுகின்றதா…? சுகாதாரத்துறையில் பணிபுரிவோர் பலவீனமானவர்களை மேம்படுத்துவதற்காக பயிற்றப்பட்டுள்ளோராய் இருக்க வேண்டுமா அல்லது சிறு சலனத்துக்கு இணைப்பைத் துண்டிக்கும் மின்சார இணைப்பில் இருக்கும் வெறும் ட்ரிப் போன்றவர்களா…? இந்தத் துறையில் உள்ளோரின் துஷ்பிரயோகங்களை எதிர்வினையின்றி, மௌனிகளாக ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக இந்த கேள்விகளை நாம் சுகாதார சேவகர்களிடம் கேட்க வேண்டும்.

சுகாதாரத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்திருக்கும் தற்போதைய தொற்றுநோய் போன்ற காலகட்டத்தில், இந்தக் கேள்விகளைக் கேட்பது மிக முக்கியமானது. இந்த கேள்விகள் மூலம், இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் தங்கள் சொந்த உயிரையும் பொருட்படுத்தாது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வரும் கடின உழைப்பை மறுக்க முயற்சிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை போன்ற ஒரு நாட்டில் சுகாதார சேவைகளை வைத்திருப்பதன் நன்மை மில்லியன் கணக்கான குடிமக்களுக்கு இலவச மருத்துவம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அணுகலை வழங்குகிறது. இந்த பெறுமதிமிக்க சேவைகளை மக்களுக்கு வழங்கும்போது உண்மையான கவனிப்பு இல்லாததன் காரணங்களை கேள்விக்குட்படுத்துவதே இக்கேள்விகளின் உண்மையான நோக்கமாகும். உள்ளம் மற்றும் உடலின் முழுமையான கவனிப்பை வழங்குவதற்கு ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைச் சுற்றி இந்த அமைப்பு கட்டப்படவில்லை என்றால், நாம் தோல்வியடைகிறோம் என்று வாதிடலாம்.

ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய சுதேச மருத்துவ நடைமுறைகள் பெரும்பாலும் மேற்கத்திய மருத்துவத்திற்கு ஆதரவாக புறக்கணிக்கப்படுகின்றன, ஆனால் சுதேச மருத்துவ தத்துவங்கள் இந்த விஷயத்தில் தீர்வுகளைத் தேடும்போது உதவியாக இருக்கும். ஆயுர்வேதம் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு மட்டுமல்லாது உடலுடன் உள்ளத்துக்கும் சிகிச்சையளிப்பதாக நம்புகிறது, ஒரு நோயாளியின் உடல் நோயுடன் உள நலனையும் கவனித்துக்கொள்வதை உறுதி செய்கிறது. இத்தகைய படிப்பினையை தேசிய சுகாதாரத்துறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக, பொதுமக்கள் மட்டுமல்ல, கொள்கை மட்டத்திலும் கேள்விகள் கேட்கப்படுவது முக்கியமாகும். எவ்வாறாயினும், சுகாதாரத்துறையை மறுவடிவமைக்க, விஷயங்களை அகற்றுவதற்கு முன்பாக, அரசு முதலில் போதுமான காரணத்தைக் கண்டறிய வேண்டும். பொதுமக்களின் அழுத்தத்தின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். இலங்கையில் உள்ள நோயாளிகளுக்கு முடிந்தவரை சிறந்த பராமரிப்பை பெறுவதை உறுதி செய்வதற்கு முறையான விதிகள் தேவையாய் இருக்கும்போது போதுமான நிதியை ஒதுக்குவது என்பது ஒரு விஷயமல்ல.

20201007_110630        20201007_110626        20200820_095947

20200709_104033 20200528_12431220200910_075828

Leave a Reply