துபாயில் கொரோனாவால் நிர்க்கதியான இலங்கையரின் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு….

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து வௌிநாடுகளில் தொழில்புரிந்து வந்த இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு வழியின்றி எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாளாந்தம் தகவல்கள் வௌியாகி வருகின்றன.

இந்த அடிப்படையில் மத்திய கிழக்கில், குறிப்பாக துபாயில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள இலங்கை பணியாளர்கள் குறித்து அதிக எண்ணிக்கையான பதிவுகள் காணொளியுடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

கடந்த மார்ச் மாத முற்பகுதியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் இலங்கைப் பணியாளர்கள் பலர் தொழில்களை இழந்துள்ளதுடன், மீண்டும் நாடு திரும்புவதற்கு முடியாமல், உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாக பேஸ்புக் தளத்தில் பதிவுகளைக் காணக்கூடியதாய் உள்ளது.

இந்த நிலைமையின் கீழ், துபாயிலுள்ள இலங்கை கொன்சுலர் நாயகம் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு திரும்புவதற்கான எதிர்பார்ப்பில் பதிவு செய்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

தொழிலின்றி, உணவின்றி, தங்குமிட வசதிகளின்றி தாம் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதுடன், கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில் செய்வதறியாது தவிப்பதாக துபாயிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விமான பயணத்திற்கான பணம் செலுத்தியவர்களையும், தமக்கு வேண்டியவர்களையும் மாத்திரம் அதிகாரிகள் நாட்டிற்கு திருப்பியனுப்புவதாகவும், அரச செலவில் நாடு திரும்புவதற்கு எதிர்பார்க்கின்ற தம்மை கவனத்திற்கொள்ளாதிருப்பதாகவும் அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதுதவிர இலங்கையிலுள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பண வைப்பு செய்து தாங்கள் பதிவை மேற்கொள்ளாமல் வௌிநாடு வந்துள்ளதை காரணமாகக் காட்டி கொன்சுலர் அலுவலக அதிகாரிகளால் தாம் புற்க்கணிக்கப்படுவதாகவும், தமக்குப் பின்னர் பதிவு செய்தவர்கள் பலர் ஏற்கனவே நாடு திரும்பி விட்டதாகவும் துபாயிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயம் குறித்து துபாயிலுள்ள இலங்கை கொன்சுலர் நாயகம் நலிந்த விஜேரத்னவிடம் தொடர்புகொண்டு வினவியபோது, கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விமானம் மூலம் 279 இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பியனுப்பியதாக கூறினார்.

கொவிட்-19 தொற்று காரணமாக துபாயில் நிர்க்கதியாகியுள்ள மேலும் 70 பெண்கள் அடுத்து ஏற்பாடு செய்யப்படும் விமானம் மூலம் நாடு திரும்பவுள்ளதாக துபாயிலுள்ள இலங்கை கொன்சுலர் நாயகம் தெரிவித்தார்.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கண்காணிப்புடன் துபாயில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள 50 வீட்டுப் பணிப்பெண்களும், கொன்சுலர் அலுவலக கண்காணிப்புடன் நடத்தப்பட்டு வரும் தற்காலிக தங்குமிடங்களில் இருக்கின்ற 20 பெண்களும் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ளதாக நலிந்த விஜேரத்ன குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் ஒக்டோபர் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விமான சேவையின் மூலம் 20 கர்ப்பிணிப் பெண்களும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

துபாயில் கொன்சுலர் அலுவலக மேற்பார்வையில் இயங்கி வரும் தற்காலிக தங்குமிடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 140 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொன்சுலர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இவர்களை அடுத்தடுத்த விமான சேவைகள் மூலம் நாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய கொன்சுலர் ஜெனரல் நலிந்த ஜயதிஸ்ஸ, அரச செலவில் நாடு திரும்புவதற்கு எதிர்பார்ப்பில் பதிவு செய்துள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்து உறுதியான தகவல்கள் எதனையும் கூறவில்லை.

“துபாயிலிருந்து நாடு திரும்புவதற்காக கொன்சுலர் அலுவலகத்தில் சுமார் 21 000 பேர் பதிவு செய்துள்ளனர். எனினும் தற்போது அனைவரும் நாடு திரும்புவதற்கு எதிர்பார்க்கவில்லை. பதிவு செய்தவர்களில் பலர் இப்பொழுது வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விசா காலாவதியானவர்கள், சுற்றுலா விசாவில் வந்து தொழில்களில் ஈடுபட்டவர்கள் என குறிப்பிட்ட தொகையினரே இவ்வாறு துபாயிலுள்ள பூங்காக்களில் தங்கியுள்ளனர்” என நலிந்த விஜேரத்ன சுட்டிக்காட்டினார்.

எனினும், நிர்க்கதியாகியுள்ள இலங்கைப் பணியாளர்களின் விசா காலத்தை நீடித்து மன்னிப்பு காலப்பகுதியை பெற்றுக் கொடுப்பதற்கு துபாய் அதிகாரிகளுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கொன்சுலர் நாயகம் கூறினார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி இலங்கைக்கான விமான சேவைகள் நிறுத்தப்படும் சந்தர்ப்பம் வரையில் துபாயில் இருந்து 43,500 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் கொவிட்-19 விவகாரங்களுக்கான பிரிவு தெரிவித்தது.

அத்துடன் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்ட வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன்களுக்காக வௌிவிவகார அமைச்சினால் சுமார் 53 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகையில் இருந்து வௌிநாடுகளில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்காக சுமார் 30 மில்லியன் ரூபா இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் கொவிட்-19 விவகாரங்களுக்கான பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஓக்டோபர் மாதம் முற்பகுதியில் மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மூலம் ஏற்பட்ட கொரோனா கொத்தணி மற்றும் பேலியகொடை மீன் சந்தையில் ஏற்பட்ட கொத்தணி ஆகியவற்றின் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 20,000 தையும் தாண்டியுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நவம்பர் 24 ஆம் திகதி வரையில் 94 ஆக பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக வௌிநாடுகளில் இருந்து நிர்க்கதியான இலங்கையர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வரும் நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துபாய்க்கான இலங்கை கொன்சுலர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கான அடுத்து விமான சேவை எப்போது முன்னெடுக்கப்படும்? நாடு திரும்புவதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமா? என்று துபாயிலுள்ள பூங்காக்களில் தஞ்சமடைந்துள்ள நூற்றுக்கும் அதிகமான இலங்கை பணியாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

எவ்வாறாயினும், கொரோனா சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான இலங்கையர்கள் துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறித்து சமூக வலைதளங்களில் நாளாந்தம் செய்திகளும், காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

========================

Links

https://www.facebook.com/100044785429877/videos/198029465033233/

https://www.dailynews.lk/2020/11/13/local/233513/help-pours-stranded-sri-lankans-who-sought-refuge-dubai-park

 

President Call for halt repatriating migrants from abroad after Minuwangoda Cluste

link:  https://youtu.be/K6ltXaSj2Oo?t=62

Photos

sdsd

wewe

Leave a Reply