நல்லிணக்கம் மற்றும் இலங்கை

நல்லிணக்கத்தைப் பற்றி எளிமையாக கூறுவதாயின், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்புகளுக்கிடையிலான கருத்தொருமைப்பாடு என பொருள்படும். எனினும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் சிக்கலான கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம் என்பது ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. பாரிய மற்றும் பரந்தளவான மனித உரிமை மீறல்களுக்குப் பின்னர் உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது நல்லிணக்கமாகும். 

நல்லிணக்கத்தை ‘மெல்லிய’ மற்றும் ‘கனதியான’ என இரண்டு வகைப்படுத்தலாம். நம்பிக்கை, மரியாதை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகள் இல்லாத சகவாழ்வை அடிப்படையாகக் கொண்டால் அந்த நல்லிணக்கம் ‘மெல்லியதாக’ காணப்படும். கண்ணியத்தை மீட்டெடுத்தல், ஒதுக்கப்படுதல் மற்றும் பாரபட்சம் காட்டப்படுவதற்கான காரணங்களை  மாற்றியமைத்தல், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களை நாட்டின் பிரஜைகளாக அவர்களுடைய நிலைக்கு மீள கொண்டுவருதல் ‘கனதியான’ நல்லிணக்கம் எனப்படுகின்றது. எனினும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் ஒரு பகுதி மாத்திரமே நல்லிணக்கமாகும். அத்தோடு, சூழலுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். 

சர்வதேச ரீதியில் காணப்படும் உதாரணங்கள்

ஒரு தசாப்த காலம் தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட சியரா லியோன், நல்லிணக்க செயற்பாட்டிற்கு இலங்கைக்கு கூறக்கூடிய சிறந்த உதாரணமாகும். இந்த யுத்தத்தின்போது கிளர்ச்சியாளர்களின் ‘புரட்சிகர ஐக்கிய முன்னணி’ மற்றும் அரச படைகள் 10,000 இற்கும் அதிகமான சிறுவர் போராளிகளை உள்வாங்கின. இச்சிறுவர்கள் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டனர். இச்சிறுவர்களை நல்லிணக்க செயற்பாட்டில் ஈடுபடுத்த சியரா லியோன் பல விசேட திட்டங்களை செயற்படுத்தியது. அவர்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகவும் மாத்திரமன்றி எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கொண்டவர்களாகவும் நோக்கப்பட்டனர். சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டம் 2007ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தனித்துவமான கலப்பு நீதிமன்றம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன நிறுவப்பட்டன.

பெருவில் ‘ஸைனிங் பாத்’ என்ற தீவிரவாத அமைப்பை அழித்த பின்னர் வந்த ஊழல் நிறைந்த மற்றும் சர்வாதிகார ஆட்சி, இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டிற்கு மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டாகும். உண்மை ஆணைக்குழுவை நிறுவுதல், காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்துதல், நியாயமான நீதி செயன்முறை மற்றும் அமைதியை நிலைநாட்ட நினைவுகூரல்களை மேற்கொள்ளல் என பல செயற்பாடுகளை பெரு முன்னெடுக்க வேண்டியிருந்தது.

இலங்கைக்கு நல்லிணக்கம் அவசியமா?

நல்லிணக்கத்தைப் பற்றி பேசும்போது 30 வருடகால யுத்தம் எமது நினைவிற்கு வருகின்றது. எனினும், இலங்கை வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரம், 1971 கிளர்ச்சி மற்றும் 1983 கறுப்பு ஜூலை போன்ற பல சம்பவங்கள்  நல்லிணக்கத்தை ஒரு தேவைப்பாடாக மாற்றின. இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தவறியதன் விளைவாகவே உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. மிகவும் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாக 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை குறிப்பிடலாம். சமூகங்களுக்கு எதிரான பாரபட்சம், சமூக அநீதி, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக இழப்பீடு பெற்றுக்கொடுக்காமை போன்றன இச்சம்பவங்களுக்கு பின்னாலுள்ள காரணங்களாகும். பல்லின மற்றும் பல மதங்களை கொண்ட நாடு என்ற ரீதியில் இச்சமூகங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு இலங்கைக்கு உண்டு. இதனடிப்படையில் நல்லிணக்கம் மிகவும் அவசியமானது. 

இலங்கையின் இதுவரையான செயற்பாடுகள்

நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் திருப்புமுனையாக கடந்த 2015ஆம் ஆண்டு மாறியது. கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிராக சட்டரீதியான மற்றும் சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் இணங்கியது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீட்டு பொறிமுறை, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் என்பன, மனித உரிமை அப்பட்டமான முறையில் மீறப்பட்ட சமூகங்களுக்கு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மாற்றங்களாகும். பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இலங்கை நல்லிணக்க பொறிமுறையில் கவனம் செலுத்த வேண்டும். இப்பின்னணியில், நல்லிணக்கம் தொடர்பாக செயற்பட்ட அநேகமான நிறுவனங்கள் மற்றும் செயற்பாடுகள் தற்போது முடங்கிப்போயுள்ளமை பரிதாபமான விடயமாகும்.

Leave a Reply