பொத்துவில் முகுதுமகா விகாரை : ஊடகங்கள் காணாத மறுபக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள முகுது மகா விகாரையைச் சூழவுள்ள பகுதி தொல்பொருள் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் இக் காணிகளை அபகரித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தமக்கு கவலையளிப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

“ நான் இப்பகுதியிலேயே பிறந்து வளர்;ந்தவன். எனக்கு இப்போது 73 வயதாகிறது. நாம் குடியிருக்கும் காணிகளுக்கு சந்திரிக்கா அரசாங்கத்தினால் ‘ஜயபூமி’ காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நானறிந்தவகையில் இத் தொல்பொருள் காணிகளை நாம் பாதுகாத்து வந்துள்ளோமே தவிர ஒருபோதும் அபகரிக்கவில்லை” என பொத்துவில் பகுதியில் வசிக்கும் சிரேஷ்ட பிரஜையான அப்துல் காதர் அசனார் லெப்பை குறிப்பிடுகிறார்.

ஊடக கவனயீர்ப்பு

முகுது மகா விகாரை விவகாரம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் சிங்கள பத்திரிகைகளில் 20 க்கும் மேற்பட்ட செய்திகள் மற்றும் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதே காலப்பகுதியில் சிங்கள தொலைக்காட்சிகளின் செய்தி அறிக்கைகளிலும் பல தடவைகள் இவ்வாறான தவறான தகவல்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இப் பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாகவே குறிப்பிடுகின்றன. பிரபல இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன, கடந்த வருடம் இப் பகுதிக்கு விஜயம் செய்து வெளியிட்ட வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் இவ்விவகாரம் தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு போலிச் செய்திகளும் கூட பொத்துவில் முகுதுமகா விகாரை விவாகரம் பூதாகரமாக்கப்படவும் இப் பகுதியில் இன ரீதியான பதற்ற நிலை தோன்றவும் மற்றொரு காரணமாகும்.

எனினும் இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் ஒருபக்க கருத்துக்களை மாத்திரம் கொண்டு அறிக்கையிடப்பட்ட செய்திகள் என்றும் அப் பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

சர்ச்சையின் பின்னணி

1951 ஆம் ஆண்டு பொத்துவில், மண்மலை பகுதியில் தொல்லியல் தொடர்பான சான்றுகள் காணப்;பட்டதையடுத்து இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் அப்பகுதியின் 72 ஏக்கர் நிலம் நில அளவைப் படமின்றி தொல்பொருள் வலயமாக வர்த்தமானி அறிவிப்புச் செய்யப்பட்டது.

பின்னர் 14 வருடங்களின் பின்னர் 1965 ஆம் ஆண்டு 40 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன் 30 ஏக்கர் 03 ரூட் 02 பேர்ச்சஸ் காணி மாத்திரம் நில அளவைப் படத்துன் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்கப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கான தொல்பொருள் செயலணி ஸ்தாபிக்கப்பட்டதுடன் பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவினரும் அண்மையில் பொத்துவில் முகுது மகா விகாரைப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் நில அளவைத் திணைக்களத்தினால் 30 ஏக்கர் 03 ரூட் 02 பேர்ச்சஸ் காணியினை நில அளவை செய்து எல்லையிடுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அப் பகுதி விகாராதிபதி அதில் தலையிட்டு 72 ஏக்கர் காணியையும் அளவிட்டு எல்லைக்கற்கள் இடப்பட வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இதனால் கலவரமடைந்த அப் பகுதி மக்கள், அவ்வாறு 72 ஏக்கர் காணிகளையும் அளப்பதானது தங்களது பூர்வீக நிலங்களைப் பறிப்பதற்கான முயற்சி என அச்சம்கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

காணி உறுதிகள் உள்ளன

இது பற்றி பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். வாஸித் குறிப்பிடுகையில், 72 ஏக்கர் நிலப் பகுதியினுள் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ளன. இந்த 300 குடும்பங்களும் வாழும் காணிகள் அவர்களுக்கு சட்டப்படி சொந்தமானவை. இதற்கான காணி உறுதிப்பத்திரங்கள் அவர்கள்வசம் உள்னள. ஆனால் 72 ஏக்கர் நிலம் தொல்பொருள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்படுமானால் நூறு வருடங்களாக வசித்து வரும் 300 குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழக்கும் நிலை ஏற்படும். இந்த அச்சம் காரணமாகவே மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடுகின்றனர்” என்றார்.

ஊடகங்களின் தவறான சித்தரிப்பு

இந்த விவகாரத்தின் பின்னணி இவ்வாறிருக்கையில், முஸ்லிம்கள் இக் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் இம்மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளன.

இது தொடர்பில் சமீபத்தில் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சட்டத்தரணியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான முஷர்ரப் முதுநபீன், “ பொத்துவில் முகுதுமகா விகாரை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்டுவது கவலயைளிக்கிறது. இதற்கு ஊடகங்களும் துணைபோயுள்ளமை விவகாரத்தை பூதாகரமாக்கியுள்ளது. தொல்பொருள் முக்கியத்துவம்வாய்ந்த இந்த இடத்தை இவ்வளவு காலமும் பாதுகாத்து பராமரித்தது இப் பகுதியில் வாழும் முஸ்லிம்களே என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டத் தவறிவிட்டன. மாறாக முஸ்லிம்கள் அபகரித்துள்ளதாக சித்தரிக்க முனைவது அபத்தமானதாகும். முஸ்லிம் நபர் ஒருவர்தான் இன்றும் கூட அத் தொல்பொருள் காணியின் பாதுகாவலராக உள்ளார். இக் காணிக்குள் பௌத்த விகாரையை நிரமாணிப்பதற்குக் கூட பொத்துவிலில் உள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொது மக்களும்தான் முழுமையான அனுமதியை வழங்கினர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாம் செய்த இவ்வாறான நடவடிக்கைகளை மறந்துவிட்டு, இன்று எம்மை இனவாதிகளாக, அடிப்படைவாதிகளாக சித்தரிப்பது என்ன வகையில் நியாயம்?” என அவர் கேள்வியெழுப்பினார்.

இதனிடையே உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளை மாத்திரம் ஊடகங்கள் உள்ளிட்ட தரப்பினர் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள காணி உரிமைக்கான மக்களின் கூட்டமைப்பு, வேண்டுமென்றே தூண்டிவிடுகின்ற ‘அத்துமீறுவோர்’, ‘பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தல்’ மற்றும் ‘தீவிரவாதிகள்’ போன்ற சொற்பதங்களைத் தவிர்க்குமாறும் கோரிக்கைவிடுத்துள்ளது. உண்மைகள் ஊடக தர்மத்தினை மதித்து பொறுப்புடன் வழங்கப்படவேண்டும். ஏற்கனவே பிளவுபட்டுள்ள சூழலில் மேலும் பிரிவுகளையும் பக்கச்சார்புகளையும் தூண்டக்கூடாது என்றும் அக் கூட்டமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம் மக்களை எதிர்க்கவில்லை

இதேவேளை இந்த விவகாரம் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பொத்துவில் முகுது மகா விகாரையின் விகாராதிபதி வரகாபொல இந்திரதிஸ்ஸ தேரர் “ முகுது மகா விகாரை தொடர்பாக வெவ்வேறு தலைவர்கள் உண்மைக்குப் புறம்பான பல விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இலங்கையில் தொல்பொருட்கள் எனக் கூறப்படுபவை பண்டைய விகாரைகளாகும். இங்குள்ளது 2300 வருட வரலாற்றைக் கொண்ட பழைய விகாரை. அதனால் தொல்பொருள் திணைக்களத்தினரை விடவும் பிக்குகளுக்கே இந்த விகாரை மீது உரிமை உள்ளது. யாரும் இச்சந்தர்ப்பத்தில் இனவாத, மதவாதப் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டியதில்லை. இங்குள்ள காணிகளுக்குள் தொல்பொருட்கள் மறைந்து கிடக்கின்றன. முஸ்லிம் மக்களை தாக்குவதோ இங்கிருந்து துரத்துவதோ எமது நோக்கம் அல்ல. தொல்பொருட்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும். 72 ஏக்கர் ஆகட்டும் அல்லது அதற்கு மேலதிகமாகக் கூட இருக்கட்டும். இதன் பிதான நோக்கம் தொல்பொருட்களைப் பாதுகாப்பதேயாகும். இது தேர்தல் காலம் என்பதால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கான விருப்பு வாக்குகளை கூட்டிக் கொள்வதற்காகவே இந்த விடயத்தை தூக்கிப் பிடித்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. வரலாற்றிலும் இந்த விகாரையை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர். எனவே முஸ்லிம் மக்கள் கலவரமடைய வேண்டாம். தொல்பொருள் அகழ்வாய்வுப் பணிகளின் போது அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அவர்களுக்காக நான் நீதியைப் பெற்றுத் தருவேன்” என்றார்.

தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. பொதுத் தேர்தல் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முகுதுமகா விகாரை பகுதியில் நில அளவையில் ஈடுபடவும் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. ஆக, நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒரு விவகாரத்தின் ஆழ அகலங்களை அறியாது ஒரு பக்க கதைகளை மாத்திரம் அறிக்கையிடுவதானது அப் பகுதியில் நீண்ட காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் இரு சமூகங்களிடையே விரிசலை உண்டுபண்ணவே வழிவகுக்கும். இதற்கு ஊடகங்கள் துணை போகலாமா?

Leave a Reply