போலிச் செய்திகளைத் தடுப்பது எவ்வாறு…?

போலிச் செய்திகள் உலகெங்கிலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள கவலைக்குரிய, சங்கடமான பிரச்சினைகளில் ஒன்றாகும். ஒழுக்கவிதிகள, மரபுகள் காரணமாக செய்தித்தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் அதிக போலிச் செய்திகள் இல்லை என்றாலும், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் வேகமாகப் பரவுவது மிகவும் பொதுவானது. அவ்வாறான போலியான செய்திகள் மரணங்களுக்கு கூட வழிவகுத்துள்ளன, மேலும் உலக அரசியல், பொருளாதார அமைப்பில் அவற்றால் ஏற்படும் தாக்கம் பாரியதாகும்.

போலிச் செய்தி என்றால் என்ன?
ஒரு போலிச் செய்தி என்பது எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி, தீய எண்ணத்தோடு வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட அல்லது தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு தகவலாகும். உண்மையற்ற விஷயத்தில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அல்லது தமது வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் வேண்டுமென்றே போலிச் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

போலிச் செய்திகள் ஏன் பரப்பப்படுகின்றன…?
போலிச் செய்திகளை வெளியிடுவோர் பல நோக்கங்களைக் கொண்டிருக்கலாம். சிலவேளைகளில் வணிக அல்லது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான செய்திகளை வெளியிடுவதில் சில தரப்பினர் ஈடுபட்டிருக்கலாம். ஒரு நபரின் அல்லது ஒரு நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க போலிச் செய்திகள் பயன்படுத்தப்படுவதை சில நேரங்களில் அவதானிக்கலாம்.
எந்த அடைப்படையுமின்றி, சமூகத்திற்கு தவறான தகவல்களைக் கொடுப்பதன் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை பார்த்து சந்தோசப்படும் மனநிலை கொண்ட ஒருவரோ அல்லது ஒரு குழுவோ சமூகத்தில் இருப்பதையும் எம்மால் காண முடியும்.
போலிச் செய்திகளின் பிரசாரத்திற்கு மனித நாகரிகத்தைப் போலவே ஒரு வரலாறு உண்டு என்பதற்கான சான்றுகள் உள்ளன. முதல் நூற்றாண்டில் ரோமானிய அரசியல்வாதியான மார்க் அன்டனியினது தற்கொலைக்கு காரணம் ஒரு வதந்தி என்று கூறப்படுகிறது.
போலிச் செய்திகளை அடையாளம் காண்பது எவ்வாறு…? 
போலி செய்திகளைக் அடையாளம் காண, நீங்கள் உலகத்தைப் பற்றிய ஓரளவு நுண்ணறிவும் புரிதலும் கொண்டிருக்க வேண்டும். சாதாரண நபரால் பொய் அல்லது போலியானதாகக் கருதப்படும் பல செய்திகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் போன்றவற்றை உண்மை என்று நம்பி, சமூக ஊடகங்களில் அல்லது பிற ஊடக தளங்களில் உடனடியாக பகிர்வோர் நம் சமூகத்தில் உள்ளதை சுலபமாக கண்டுகொள்ளலாம்.
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான 20 போலிச்செய்திகள், 20 க்கும் மேற்பட்ட துல்லியமான மற்றும் உண்மை செய்திகளைவிட அதிக மக்களின் அவதானத்தை ஈர்த்தன என்று கண்டறியப்பட்டது.
பேஸ்புக்கில் சிங்கள மொழியில் பதிவிடும் வெறுக்கத்தக்க பதிவுகளை கண்காணிக்கவும் அது தொடர்பாக அறிக்கையிடவும் உதவுமாறு பேஸ்புக் நிறுவனம் தம்மை கேட்டுக்கொண்டதாக  இலங்கையில் உள்ள சமூக வலைப்பின்னல் ஆய்வாளர்கள் குழு சமீபத்தில் பிபிசி சிங்கள வலைத்தளத்துக்கு கூறியிருந்தது.
போலிச் செய்திகளை அடையாளம் காணுதல்
சரியான உண்மைகளின் அடிப்படையில் வெளியான செய்தியினால் யாரும் திருப்தியடைவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. போலிச் செய்திகள் சமூகத்தில் விரைவான தாக்கத்தை ஏற்படுத்துவதால், செய்திகளின் துல்லியத்தை சரிபார்க்க முடியாத, நுண்ணறிவு அற்றவர்கள் விரைவில் அவர்களின் இனவெறி, மத மற்றும் நுகர்வோர் உணர்வுகளை இரட்டிப்பாக்கிக்கொள்கின்றனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. போலிச் செய்தி வெளியீட்டாளர்களின் முக்கிய நோக்கம் இதுதான் என்பதும் தெரிய வந்துள்ளது.
போலிச் செய்திகளை அடையாளம் காணும்போது பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டிய சில பிரச்சினைகள் குறித்து சர்வதேச நூலக சங்கங்கள், நிறுவனங்களின் கூட்டமைப்பு  (International Federation of Library Associations and Institutions – IFLA)ஒரு எளிய விளக்கத்தை வழங்கியுள்ளது.
ஒரு போலிச் செய்தியை அடையாளம் காண, பின்வருவனவற்றில் கவனம் செலுத்துங்கள்:
1. தகவலுக்கான மூலாதாரம் உள்ளதா என்று பாருங்கள்.
2. தலைப்பு செய்தியை மட்டுமல்ல, முழு செய்தியையும் படியுங்கள்.
3. செய்தி எழுதியவர் பற்றி ஆராயுங்கள்.
4. செய்திகளை உறுதிப்படுத்தும் வெளிப்புற ஆதாரங்களைத் தேடுங்கள்.
5. செய்தி வெளியிடப்பட்ட தேதியைப் பற்றி சிந்தியுங்கள்.
6. இது நகைச்சுவையானதா அல்லது உண்மையானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
7. செய்தி உங்களில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள்.
8. குறிப்பிட்ட விடயம் பற்றிய அதிகமாகப் தெரிந்து புரிந்துகொண்ட தரப்புடன் தொடர்புகொண்டு உறுதிசெய்து கொள்ளுங்கள்.

போலிச் 

செய்தியை கண்டறிவது எவ்வாறு…?
பிபிசியின் சிங்கள வலைத்தளம் போலிச் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க உதவும் பல முக்கிய உதவிக்குறிப்புகளையும் கொண்டுள்ளது. அந்த குறிப்புகளின் சுருக்கம் பின்வருமாறு:
1. தொடர்புடைய செய்திகளை வேறு யாராவது வெளியிட்டுள்ளார்களா என்பதை கண்டறிவது
2. குறிப்பிட்ட செய்தி வானொலி, தொலைக்காட்சி அல்லது செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவும்
3. செய்தி வெளியிட்ட நிறுவனம் அல்லது பேஸ்புக் பக்கத்தைப் பற்றி இதற்கு முன் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
4. தொடர்புடைய செய்திகள் வெளியிடப்பட்ட வலைத்தளத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆராயவும்
5. புகைப்படங்கள் அல்லது வீடியோக்களின் தன்மை (சில நேரங்களில் செம்மைப்படுத்தப்பட்ட (நுனவைநன) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் போலிச் செய்திகள் வெளியாகும்)
6. செய்தி நம்பகமானதா என்பதைக் கவனியுங்கள்
மேற்கண்ட விடயங்களில் திருப்தி அடையவில்லை என்றால், அத்தகைய செய்தியை வெளியிடுவதைத் தவிர்க்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
போலிச் செய்திகளினால் ஏற்பட்ட விபரீதங்கள் தொடர்பான  ஏராளமான எடுத்துக்காட்டுகள் வரலாற்றில் உள்ளன. மேலும் செய்திகள் கட்டுப்பாடின்றி சுதந்திரமாகப் பாயும் சமுதாயத்தில் போலிச் செய்திப்புழக்கம் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் அற்பமானதல்ல என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல.
கடந்த தசாப்தத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் விரைவான விரிவாக்கம் காரணமாகவும் அந்த ஊடகங்களில் தகவல் பாய்ச்சலுக்கு எந்த ஒழுங்குமுறையும் இல்லை என்பதன் காரணமாகவும் இந்த போலி செய்திகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் உள்ள நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
இலங்கையர்களான நாம், தவறான செய்திகளாலும், பிரச்சாரங்களாலும் துரிதமாக ஏமாற்றப்படக்கூடியர்கள் என்பதை, இதுவரை நாம் எதிர்கொண்ட பல்வேறு நிகழ்வுகளின் மூலம் புரிந்துகொள்ளமுடியும். அமைதியான முறையில் தீர்க்கப்படக்கூடிய இன மற்றும் மத பிரச்சினைகள் தவறான பிரச்சாரத்தின் மூலம் ஒரு பெரிய சமூக நெருக்கடியாக மாற்றப்பட்டுள்ளன. எனவே போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, எந்தவொரு செய்தியின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்காமல் ஒருவருக்கொருவர் பகிரக்கூடாது.
ஊடகவியலானது உறுதிப்படுத்தக்கூடிய கதைகளை உருவாக்குகிறது. மூலாதாரங்கள் அதற்குத் துணையாக இருக்கின்றன. செய்தியின் துல்லியத் தன்மை செய்திக்கு பலம் சேர்க்கிறது. செய்திகள் தொடர்பான இந்த வரையறை நவீன ஜனநாயக பத்திரிகையியலில் பயன்படுத்தப்படும் ஒரு சுலோகமாகும். அதைச் சரியாக புரிந்துகொள்வதும் அதன் விதிமுறைகளை உரியமுறையில் பின்பற்றுவதும் ஊடகங்களிலும் சமூக அரங்கிலும் போலிச் செய்திகளுக்கு அவசியமில்லாத சூழலை உருவாக்க உதவும்.

 

 

Leave a Reply